Loading...
இந்தியாவில் BS-VII உமிழ்வு விதிகள் அமல்: 2029 ஏப்ரல் முதல் புதிய கார்களுக்கு கெடுபிடி
BS VII உமிழ்வு விதிகளை வரும் 2029 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது

இந்தியாவில் BS-VII உமிழ்வு விதிகள் அமல்: 2029 ஏப்ரல் முதல் புதிய கார்களுக்கு கெடுபிடி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கார்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களுக்கு பாரத் ஸ்டேஜ்-VII உமிழ்வு விதிகளை வரும் 2029 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்(MoRTH) இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கான காலக்கெடுவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, வரைவு அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ 7 விதிகளுக்கு இணையான தரத்தில் இந்த பிஎஸ்-VII உமிழ்வு விதிகள் உருவாக்கப்படவுள்ளன. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு முகமைகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில், 2029 ஏப்ரல் முதல் 2035 ஏப்ரல் வரை 3 கட்டங்களாக 6 ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

அமலாக்கம்

3 கட்டங்களாக 6 ஆண்டுகள் அமலாக்கம்

1. ஏப்ரல் 2029: புதிய கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள்.

2. ஏப்ரல் 2030: சிறிய சரக்கு விநியோக வாகனங்கள் மற்றும் பிக்கப் வேன்கள்.

3. ஏப்ரல் 2031: பேருந்துகள் மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள்.

மாற்றங்கள்

புதிய பிஎஸ்-VII விதிகளில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்

முந்தைய பிஎஸ்-VI விதிகளை போலன்றி, பிஎஸ்-VII விதிகளில் சைலன்சர் வழியே வெளியாகும் புகையை தாண்டி பிற மாசுபாடுகளும் கண்காணிக்கப்படவுள்ளன.

புகையில் உள்ள மாசுகளைக் கண்டறியும் வரம்பு 23 நானோமீட்டரில் இருந்து 10 நானோமீட்டராக குறைக்கப்படும். இதன் மூலம் மிக நுண்ணிய நச்சுத் துகள்களும் துல்லியமாகக் கணக்கிடப்படும்.

வாகனத்தின் பிரேக் பயன்பாட்டால் ஏற்படும் தேய்மானம் மற்றும் டயர் உராய்வால் காற்றில் கலக்கும் நுண் துகள்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆய்வகப் பரிசோதனையைத் தாண்டி, நிஜச் சாலையில் இயங்கும் போது வெளியாகும் புகையையும், வாகனங்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் மாசுக் கட்டுப்பாட்டு சென்சார்கள் சரியாக செயல்படுவதையும் சுயாதீன முகமைகள் மூலம் சோதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT