புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ்
தங்களுடைய முழுமையான எலெக்ட்ரிக் காரான 'எலெட்ரெ'வின் (Eletre) வெளியீட்டுடன் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாகக் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus). முன்பு எரிபொருள் வாகனங்களையும் தாயரித்து வந்த லோட்டஸ் நிறுவனானது, முழுமையாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகப்படுத்தவிருப்பதாக முடிவெடுத்த பிறகு அந்நிறுவனம் வெளியிட்ட முதல் மாடல் இந்த எலெட்ரெ என்பது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியைச் சேர்ந்த எக்ஸ்க்ளூஸிவ் மோட்டார்ஸ் நிறுவனமே இந்தியாவில் லோட்டஸ் கார்களின் விற்பனை மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிடவிருக்கிறது. இந்நிறுவனம் தான் இந்தியாவில் பென்ட்லி கார்களின் விற்பனை மற்றும் விநியோகத்தையும் மேற்பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லோட்டஸ் எலெட்ரெ: எலெக்ட்ரிக் மோட்டார்
எலெட்ரெ, எலெட்ரெ S மற்றும் எலெட்ரெ R என மூன்று வேரியன்ட்களாக புதிய எலெட்ரெ மாடலை வெளியிட்டிருக்கிறது லோட்டஸ். இவற்றில் அடிப்படையான எலெட்ரெ மற்றும் எலெட்ரெ S மாடல்களில், 600 கிமீ ரேஞ்சைக் கொண்ட 603hp பவரை வெளிப்படுத்தக்கூடிய டூயல் மோட்டார் செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டாப் எண்டான எலெட்ரெ R மாடலில், 490 கிமீ ரேஞ்சைக் கொண்ட, 905hp பவரை வெளிப்படுத்தக்கூடிய டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படை மாடல்களானது 710Nm டார்க்குடன் 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும் நிலையில், டாப் மாடலானது 985Nm டார்க்குடன் 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.95 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது.
லோட்டஸ் எலெட்ரெ: விலை
அனைத்து எலெட்ரெ மாடல்களிலும் ஆல்-வீல் டிரைவ் மற்றும் ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய வசதிகள் ஸ்டான்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அனைத்து மாடல்களிலும் 112kWh பேட்டரியே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக 22kWh AC சார்ஜர் ஒன்றையும் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கிறது லோட்டஸ். மேலும், அதிவேக சார்ஜரைக் கொண்டு இந்த எலெட்ரெ மாடலை 10-80% வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியுமாம். இந்தியாவில் அடிப்படையான எலெட்ரெ மாடலை ரூ.2.55 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எலெட்ரெ S மாடலை ரூ.2.75 கோடி விலையிலும், எலெட்ரெ R மாடலை ரூ.2.99 கோடி விலையிலும் வெளியிட்டிருக்கிறது லோட்டஸ். 2024ம் ஆண்டு அதன் எரிபொருள் ஸ்போர்ட்ஸ் காரான எமைராவைுயம் இந்தியாவில் லோட்டஸ் வெளியிடத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.