லியோ திரைப்படத்தின் மூலம் ஆண்டனி தாசாக அறிமுகமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கார் கலெக்ஷன்
கேஜிஎஃப் படத்தில் பார்ட் டைம் வில்லனாக அதிரடி காட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜின் லியோ படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார். கார் மோகம் மிகுந்த இந்திய பிரபலங்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். இந்தியாவில் கோடிகளில் விற்பனையாகி வரும் பல கார்கள் சஞ்சய் தத்தின் கேரேஜில் நிற்கின்றன. அந்தக் கார்களின் பட்டியல் தான் இது. ஆடி R8: கருப்பு நிற முதல் தலைமுறை ஆடி R8 கார் ஒன்றை வைத்திருக்கிறார் சஞ்சய் தத். இந்தக் காரில் அவர் பயணம் செய்யும் வகையிலான புகைப்படங்கள் நிறையவே சமூக வலைத்தளங்களில் வலம் வந்திருக்கின்றன. 420hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 4.2-லிட்டர் V8 இன்ஜினைக் கொண்ட இந்தக் காரின் விலை சுமார் ரூ.2.5 கோடி.
லேண்டு ரோவர் ரேஞ்சு ரோவர் ஆட்டோபயோகிராபி:
சஞ்சய் தத்தின் சமீபத்திய கார் கலெக்ஷன்களுள் ஒன்று இந்த ரேஞ்சு ரோவர் ஆட்டோபயோகிராபி. சஞ்சய் தத் மட்டுமின்றி விக்கி கௌஷல் மற்றும் ரன்பீர் கபூர் போன்ற வேறு சில பாலிவுட் நடிகர்களும் இந்தக் காரை சொந்தமாக்கியிருக்கிறார்கள். 523hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 4.4-லிட்டர் V8 இன்ஜினைக் கொண்ட இந்தக் காரின் விலை ரூ.2.11 கோடி. ஃபெராரி 599 GTB: சஞ்சய் தத்தின் பழைய கார் கலெக்ஷன்களுள் ஒன்று இந்த ஃபெராரி 599 GTB. 2012ம் ஆண்டு இந்த காரை அவர் வாங்கிய போதே அதன் விலை ரூ.1.2 கோடியாம். ஸ்போர்ட்ஸ் காரான இந்த 599 GTB, 612hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 6.0 லிட்டர் V12 நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினைக் கொண்டது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்:
சஞ்சய் தத்தின் கேரேஜில் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். இந்தக் காரை அவருடைய மனைவி மான்யதா தத் அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். 560hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 6.6 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்ட இந்தக் காரின் விலை சுமார் ரூ.7 முதல் 8 கோடி. ஆடி Q7: இந்த ஆடி Q7 காரையும், சஞ்சய் தத்தின் மனைவியே அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். இந்தக் காரை தான் தன்னுடைய தினசரி பயன்பாட்டிற்கு சஞ்சய் தத் பயன்படுத்துவாராம். 245hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 3.0 லிட்டர் V6 இன்ஜினைப் பெற்றிருக்கும் இந்த ஆடி Q7 எஸ்யூவியானது இந்தியாவில் ரூ.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.