இந்தியாவில் வெளியானது BMW Z4 ரோட்ஸ்டர்.. விலை என்ன?
புதிய Z4 ரோட்ஸ்டர் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த முறை அதன் M40i வேரியண்ட்டை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது அந்நிறுவனம். புதிய Z4 ரோட்ஸ்டரானது CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. வரும் ஜூன் மாதம் முதல் இதன் விற்பனையை இந்தியவில் தொடங்கவிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த Z4-ல் ஆறு வெளிப்புற கலர் ஆப்ஷன்கள், மூன்று சீட்டிங் டிசைன் ஆப்ஷன்கள் மற்றும் நான்கு வீல் டிசைன் ஆப்ஷன்களை அளித்திருக்கிறது பிஎம்டபிள்யூ. ஓட்டும் முறைக்கேற்ப எக்கோப்ரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடு வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. M ஸ்போர்ட் சஸ்பென்ஷன் மற்றும் M ஸ்போர்ட் பிரேக் ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்ஜின், பாதுகாப்பு மற்றும் விலை:
இந்த Z4 M40i-யில் 340hp பவர் மற்றும் 500Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஆறு சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷனும் வழங்கப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது இந்த Z4 ரோட்ஸ்டர். பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்பக்க மற்றும் சைடு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வசதி, DSC, CBC, DBC, கிராஷ் சென்சார் மற்றும் சைடு இம்பேக்ட் ப்ரொடெக்ஷன் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ரூ.89.30 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த பிஎம்டபிள்யூ Z4 M40i ரோட்ஸ்டர்.