ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான்
BMW தனது i5 எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரீமியம் EV கார், ஒற்றை M60 xDrive மாறுபாட்டில் வழங்கப்படுகிறது. அதன் விலை ரூ.1.20 கோடியாகும்(எக்ஸ்-ஷோரூம்). இந்த வாகனம் கம்ப்ளீட்லி பில்ட்-அப் (CBU) வழியாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது, இந்தியாவில் BMWஇன் மின்சார வாகன வரம்பில் உள்ள i4 மற்றும் i7 மாடல்களுக்கு இடைபட்ட மாடல் இதுவாகும். i4 மற்றும் i7 மாடல்களின் விலை முறையே ரூ.72.5 லட்சம் மற்றும் ரூ.2.03 கோடியாகும். i5 ஆனது இந்தியாவில் BMW இன் ஐந்தாவது EV ஆக வெளியாகியுள்ளது. இது iX1, iX XDrive50, i4 மற்றும் i7 ஆகிய மாடல்களுக்கு அடுத்தபடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
BMW i5 இன் சார்ஜிங் திறன்கள் மற்றும் வெளிப்புற அம்சங்கள்
i5 ஆனது சக்திவாய்ந்த 601hp மோட்டார் மற்றும் 83.9kWh பேட்டரியின் உதவியுடன் இயங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 516km வரை செல்லக்கூடிய திறன் இதற்கு உள்ளது. i5 மாடல், வெறும் 3.8 வினாடிகளில் 0-100km/h வேகத்தை அடைந்து 230km/h வேகத்தை எட்ட கூடியதாகும். i5 ஆனது 11kW வால் சார்ஜருடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் 22kW AC சார்ஜரை விருப்பப்பட்டால் பொருத்திக்கொள்ளலாம். இதன் பேட்டரி 30 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் ஆக வல்லது. அதுபோக, கிளாசிக் கிட்னி கிரில், செங்குத்தாக அடுக்கப்பட்ட LED DRLகள் கொண்ட மெலிதான ஹெட்லைட்கள், பம்பரில் பெரிய இன்டேக், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், மெல்லிய LED வால் விளக்குகள் ஆகியவை இதில் உள்ளன.