ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்(NHTSA) ஏஆர்சி ஆட்டோமோட்டிவ் மற்றும் டெல்பி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றிலிருந்து தவறான இன்ஃப்ளேட்டர்கள் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குறைபாடுள்ள இன்ஃப்ளேட்டர்கள் விபத்தின் போது வெடித்து, வாகனத்தின் உட்புறத்தில் துண்டு துண்டாக வரும். இது விபத்தின்போது காயங்கள் மற்றும் இறப்புக்கு காரணமாக அமைகின்றன. இது தொடர்பாக NHTSA இன் விசாரணையில் குறிப்பிட்ட ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களில் போதுமான வெல்ட்கள் இல்லை அல்லது வெல்டிங் செயல்பாட்டின் போது ஒரு வென்ட் அடைக்கப்படுவதால் கேனிஸ்டர்கள் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஏர்பேக் காரணமாக கார் திரும்பப் பெறுவதில் சட்ட சிக்கல்
கடந்த செப்டம்பர் 2023 இல், NHTSA ஏஆர்சி ஆட்டோமோட்டிவ் மற்றும் டெல்பி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம் இரண்டையும் கார்களை திரும்பப் பெற பரிந்துரைத்தது. இருப்பினும், ஏஆர்சி ஆட்டோமோட்டிவ் இந்த பரிந்துரைக்கு இணங்கவில்லை. டெல்பி தனது ஏர்பேக் வணிகத்தை ஸ்வீடனின் ஆட்டோலிவ் நிறுவனத்திற்கு விற்றதால் அது ஒரு தனி நிறுவனமாக இல்லை. இந்த சட்ட சிக்கலுக்கு மத்தியில், NHTSA சம்பந்தப்பட்ட அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் சப்ளையர்களுக்கும் இந்தப் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்கனவே ஒரு மில்லியன் கார்களை திரும்ப அழைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ, ஃபோர்டு மற்றும் வோக்ஸ்வேகன் ஆகியவையும் கார்களை திரும்பப் பெறும் அழைப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது.