இந்தியாவில் வெளியானது புதிய 'BMW 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்'
இந்தியாவில் விற்பனையாகி வரும் 6 சீரிஸ் கிராண்டு டுரிஸ்மோவின் புதிய வேரியன்ட் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடனும், சில புதிய வசதிகளுடனும் வெளியாகியிருக்கிறது '6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்'. இந்தப் புதிய M ஸ்போர்ட் சிக்னேச்சரின் முன்பக்க கிரில்லில் கூடுதல் க்ரோம் அக்சென்டை வழங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. மேலும், கதவுகளை மூட சாஃப்ட்-க்ளோஸ் வசதியையும் அளித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த வசதிகள் M ஸ்போர்ட் வேரியன்டில் வழங்கப்படவில்லை. புதிய சிக்னேச்சரில், கீலெஸ் எண்ட்ரி, 12.3 இன்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்திற்கான கெஸ்டர் கண்ட்ரோல்கள் மற்றும் ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட் ஆகிய வசதிகளையும் அளித்திருக்கிறது பிஎம்டபிள்யூ.
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்: இன்ஜின் மற்றும் விலை
புதிய M ஸ்போர்ட் சிக்னேச்சரில் 630i பெட்ரோல் இன்ஜினை மட்டுமே கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இதன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது, 258hp பவரையும், 400Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன், ஏற் சஸ்பென்ஷன் செட்டப்பையும் பெற்றிருக்கிறது புதிய M ஸ்போர்ட் சிக்னேச்சர். பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், EBDயுடன் கூடிய ABS வசதி, அனைத்து பயணிகளுக்கு 3 பாய்ண்ட் சீட்பெல்ட் மற்றும் ரன்-ஃப்ளாட் டயர்களைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தியாவில் ரூ.75.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்.