இந்தியாவில் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய அர்பன் வேரியன்டை வெளியிட்டிருக்கிறது பஜாஜ்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ். சேட்டக் அர்பன் (Chetak Urbane) எனப்படும் இந்தப் புதிய வேரியன்டானது 113 கிமீ IDC ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் சேட்டக் ஸ்கூட்டரானது, 126 கிமீ IDC ரேஞ்சையும், 108 கிமீ நிஜ உலக ரேஞ்சையும் கொண்டிருக்கிறது. எனவே, அர்பன் வேரியன்ட் நிஜ உலக ரேஞ்சு தற்போது விற்பனையில் இருக்கும் வேரியன்டை விட குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 63 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கும் சேட்டர் அர்பன் வேரியன்டில், எக்கோ என்ற ஒரே ஒரு ரைடிங் மோடை மட்டுமே கொடுத்திருக்கிறது பஜாஜ்.
பஜாஜ் சேட்டக் அர்பன்: பிற வசதிகள்
சேட்டக் மாடலின் ப்ரீமியம் வேரியன்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே கலர் LCD திரையை புதிய அர்பன் வேரியன்டிலும் கொடுத்திருக்கிறது பஜாஜ். அர்பன் வேரியன்டுடன் கூடுதலாக டெக்பேக் (TecPac) ஒன்றையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். இந்த டெக்பேக்கானது, சேட்டக்கின் செயல்திறனை அதிகரிப்பதுடன், கூடுதலான சில வசதிகளையும் அளிக்கிறது. டெக்பேக் கொண்ட சேட்டக் அர்பன் மாடலானது அதிகபட்சமாக 73 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. அர்பன் வேரியன்டில் சார்ஜிங் திறனையும் 800W-ல் இருந்து 650W ஆக குறைத்திருக்கிறது பஜாஜ். இதன் காரணமாக சார்ஜிங் நேரமும் ஒரு மணி நேரம் வரை அதிகரித்து 4.50 மணி நேரமாக கூடியிருக்கிறது.
பஜாஜ் சேட்டக் அர்பன்: விலை
தற்போது விற்பனையில் இருக்கும் சேட்டக்கைப் போலவே, சேட்டக் அர்பன் வேரியன்டிலும் 2.9kWh பேட்டரியையே பயன்படுத்தியிருக்கிறது பஜாஜ். டெக்பேக்கானது சேட்டக் அர்பனில் எக்கோ ரைடிங் மோடுடின் கூடுதலாக ஸ்போர்ட் ரைடிங் மோடையும் அளிக்கிறது. அர்பன் வேரியன்டின் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்தப் புதிய சேட்டக் அர்பன் வேரியன்டை ரூ.1.15 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது பஜாஜ். டெக்பேக்குடன் கூடிய சேட்டக்கானது ரூ.1.21 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இந்த சேட்டக் அர்பன் வேரியன்ட் வெளியீட்டைத் தொடர்ந்து, சேட்டக்கின் ப்ரீமியம் மாடலையும் பஜாஜ் அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.