பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ
இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பஜாஜ் ஆட்டோ தனது 13 வாகனங்களுக்கும் வெற்றிகரமாக ஒப்புதல் பெற்றுள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உள்ளடக்கிய இத்தகைய விரிவான ஒப்புதலைப் பெற்ற முதல் நிறுவனம் இதுவாகும். இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, பிஎல்ஐ திட்டத்திற்குத் தேவையான உள்நாட்டு மதிப்பு கூட்டல் அளவுகோல்களை பஜாஜ் ஆட்டோ பூர்த்தி செய்துள்ளது. முன்னதாக, ஓலா எலக்ட்ரிக் இந்த வார தொடக்கத்தில் இரண்டு கூடுதல் வாகனங்களுக்கு பிஎல்ஐ நன்மைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஓலா எஸ்1எக்ஸின் மணிக்கு 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் பதிப்புகள் பிஎல்ஐ திட்டத்தின் தகுதித் தேவையை பூர்த்தி செய்ததை அடுத்து சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎல்ஐ திட்டத்தின் பட்ஜெட் மற்றும் ஆட்டோ துறையில் தாக்கம்
ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறையில் பிஎல்ஐ திட்டத்திற்கான பட்ஜெட்டை இந்திய அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ₹484 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2024-25ஆம் ஆண்டில் ₹3,500 கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை 2023-24ன் படி, இந்த முன்முயற்சியானது மொத்தம் ₹67,690 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது மற்றும் மார்ச் 2024 நிலவரப்படி ₹14,043 கோடி முதலீட்டுக்கு வழிவகுத்தது. பிஎல்ஐ திட்டமானது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. திட்டமிடப்பட்ட 1.48 லட்சம் வேலைகளில், ஏற்கனவே 28,884 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த முயற்சியின் கீழ் மொத்தம் 85 விண்ணப்பதாரர்கள் ஒப்புதல் பெற்றுள்ளனர்.