
2024 ஜனவரி முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்தும் ஆடி
செய்தி முன்னோட்டம்
2024 ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து மாடல் கார்களின் விலையையும் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி.
அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலை, விநியோகச் சங்கிலி தொடர்பான செலவுகள் மற்றும் உயர்ந்து வரும் செயல்பாட்டு செலவுகள் ஆகியவற்றினால் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆடி.
இந்த விலை உயர்வு முடிவானது தங்களை மட்டுமல்லாமல், தங்களது டீலர்கள் மற்றும் பார்ட்னர்களையும் மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ஆடி
இந்தியாவில் ஆடியின் செயல்பாடுகள்:
2023ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 88% விற்பனை உயர்வைச் சந்தித்திருக்கிறது ஆடி. செப்டம்பர் இறுதி வரை இந்தியாவில் 5,530 கார்களை விற்பனை செய்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறது ஆடி.
Q3, Q3 ஸ்போர்ட்ஸ்பேக் மற்றும் Q8 e-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் ஆகியவற்றை இந்த ஆண்டில் ஆடி நிறுவனத்தின் முக்கிய புதிய வெளியீடுகளாகக் கூறலாம்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தங்களது எரிபொருள் காரான Q8 மாடலின் ஃபேஸ்லிப்டட் வெர்ஷன் ஒன்றை இந்தியாவில் ஆடி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.