1 லட்சம் கிமீ பயன்பாட்டை வழங்கும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கள்
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம். மின்னணு சாதனங்களின் ஆயுட்காலத்தின் மதிப்புக்கு அதன் பேட்டரிக்களும் ஒரு காரணம். அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன்கள் பேட்டரிக்களைக் கொண்டு இயங்குவதனால், அதன் மீது பயனாளர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகக் கண் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா பதிவிட்ட எக்ஸ் பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. அந்த எக்ஸ் பதிவில், தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிக்கள் 1 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேலான பயன்பாட்டை அளிக்கும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏத்தர் 450 குறித்த வாடிக்கையாளரின் கருத்து:
ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர், 70,000 கிமீ பின்பும் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த ரேஞ்சைக் கொடுப்பதாகக் கூறி, எக்ஸ் தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவை பகிர்ந்து அத்துடன், தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த தன்னுடைய கருத்தையும் தேர்த்துப் பதிவிட்டிருக்கிறார் தருண் மேத்தா. அந்தப் பதிவில், "இந்தியாவில் முதல் இருசக்கர வாகன லித்தியம் பேட்டரிக்களை உருவாக்கியது நாங்கள் தான். தொடக்க காலத்தில் அதிக அணுபவமில்லாமல் தான் தயாரிப்பைத் தொடங்கினோம். ஆனால், இப்போது எங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இது போன்ற வாடிக்கையாளர்களின் கருத்துக்களே எங்களது வெற்றிக்கான ஆதாரம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய ஏத்தர் லைன்அப்:
இந்தியாவில் 450S மற்றும் 450X என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. இரண்டு கிட்டத்தட்ட ஒன்று போலவே காட்சியளித்தாலும், வசதிகளில் நாம் மாற்றத்தைக் காண முடியும். 450S மாடலில் 2.9kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 450X மாடலில் 3.7kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரிக்களை 1.1 பில்லியன் கிலோமீட்டர்கள் வரை இயக்கி சோதனை செய்திருப்பதாகவும், தொடர்ச்சியான இயக்கத்தையும் தாக்குப்பிடிக்கும் வகையிலேயே உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது ஏத்தர். மேற்கூறிய இரண்டு மாடல்களுடன் புதிதாக மேலும் ஒரு குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட ஏத்தர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.