ஸ்பைஷாட்டில் சிக்கிய ஏப்ரிலியா RS 440.. என்னென்ன வசதிகளுடன் வெளியாகிறது?
இந்தியாவில் தங்களுடைய RS 660 மாடல் பைக்கின் சிறிய வெர்ஷனான RS 440 பைக்கை அறிமுகப்படுத்த ஏப்ரிலியா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது அந்த பைக். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டிவிஎஸ் அப்பாச்சி RR 310, யமஹா YZF R3 மற்றும் கேடிஎம் RC 390 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக, இந்தப் புதிய RS 440 பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது இத்தாலியைச் சேர்ந்த ஏப்ரிலியா நிறுவனம். அந்நிறுனம் தற்போது இந்திய சாலைகளில் RS 440யை சோதனை செய்து வரும் நிலையில், ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. புதிய ஸ்பைஷாட் வீடியோவில், பைக்கின் முன் தோற்றம் மற்றும் பிற பயன்பாட்டு அம்சங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
என்னென்ன வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது ஏப்ரிலியா RS 440?
அதிகபட்சமாக 48hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, பேரலல் ட்வின் லிக்விட் கூல்டு இன்ஜினை புதிய RS 440யில் ஏப்ரிலியா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் புதிய இன்ஜினானது, RS 660யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜினின் சிறிய வெர்ஷனாகவும் இருக்கலாம். முன்பக்கம் USD ஃபோர்க் பின்பக்கம் மோனோஷாக் ஆகிய சஸ்பென்ஷன்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரைடு பை வயர், ட்ராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், TFT டிஸ்பிளே, ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் ரூ.4 லட்சம் விலையில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த புதிய பைக்கை ஏப்ரிலியா வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.