10,000 மின்சார வாகனங்களை வாங்க ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்
2025 ஆம் ஆண்டிற்குள் தனது தொலைதூர டெலிவரிகளுக்கு இலக்காகக் கொண்டு, 10,000 மின்சார வாகனங்களை வாங்குவதற்காக எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், ஜென்டாரி கிரீன் மொபிலிட்டி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமேசான் நிறுவனத்திற்கு மின்சார வாகனங்களை கொள்முதல் செய்து, டெலிவரி சேவை வழங்குநர்களுக்கு விரிவான வாகன மேலாண்மை சேவைகளை வழங்க உள்ளது. மேலும், இதன் மூலம் அமேசான் இந்தியாவின் மின்சார வாகன சேவைகளின் தடையற்ற செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும். அமேசான் டெலிவரிகளுக்கு அதிக மின்சார முச்சக்கர வண்டிகளை டெலிவரி சேவை வழங்குநர்களுக்கு வழங்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மின்சார வாகனங்களை அதிகரிக்கும் அமேசான் இந்தியா
அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அபினவ் சிங், இந்த கூட்டாண்மை குறித்து கூறுகையில், "எங்கள் டெலிவரி சேவை கூட்டாளர்களுக்கு சரியான மின்சார வாகனங்கள், ஆரம்பம் முதல் இறுதி வரையிலான வாகன வாழ்க்கை சுழற்சி மேலாண்மை சேவைகள் மற்றும் சார்ஜிங் மற்றும் பார்க்கிங் வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்று கூறினார். அமேசான் நிறுவனம் 2023ஆம் ஆண்டின் இறுதியில் 7,200க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் பயன்படுத்தியது. மேலும், 2025ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு சந்தையில் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான இலக்கை அடையும் பாதையில் உள்ளது என்றார். அமேசான் இந்தியா தற்போது நாட்டில் 400 நகரங்களில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.