ஏர்பேக் குறைபாடு; அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் ஒரு நாட்டில் 14 லட்சம் கார்களை திரும்பப் பெறும் பிஎம்டபிள்யூ
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ சீனாவில் டகாடா ஏர்பேக்கினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் காரணமாக, சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 14 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஆட்டோமோட்டிட் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2003 முதல் 2017 வரை தயாரிக்கப்பட்ட மாடல்கள் திரும்பப் பெறப்படுவதாக, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, வடகிழக்கு சீனாவில் செயல்படும் பிஎம்டபிள்யூ ப்ரில்லியன்ஸ் ஆட்டோமோட்டிவ், சீனாவில் தயாரிக்கப்பட்ட 598,496 கார்களை திரும்பப் பெறுகிறது. அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ சீனா ஆட்டோமொபைல் டிரேடிங் 7,59,448 இறக்குமதி செய்யப்பட்ட கார்களை திரும்பப் பெற உள்ளது.
பிஎம்டபிள்யூ கார்களில் ஏர்பேக் குறைபாடுகள்
சோதனைக்குப் பிறகு குறைபாடுகள் உள்ளதாக உறுதிசெய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்று, பாதுகாப்பு அபாயங்களைக் களைவதற்கு பிஎம்டபிள்யூ டிரைவரின் முன் ஏர்பேக்கை இலவசமாக மாற்றித் தரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்களால் ஸ்டீயரிங் ரீஃபிட்கள் கொண்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. அவை தவறான டகாடா ஏர்பேக்குகளை நிறுவியிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பிஎம்டபிள்யூ அமெரிக்காவில் டகாடா ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் குறைபாடு காரணமாக 3,94,000 வாகனங்களைத் திரும்பப் பெற்றது. டகாடா ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் குறைபாடு காரணமாக அவை கடுமையான அல்லது ஆபத்தான காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலை மாதம் அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.