இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW
வரும் மே 24-ம் தேதி வெளியீட்டை முன்னிட்டு 2024 i5 எலெக்ட்ரிக் செடானின் டீசரை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. பிஎம்படபிள்யூ 5 சீரிஸ் கார்கள், அதன் ஹேண்டிலிங்கிற்காகவும், லக்ஸுரியான கேபினிற்காகவும் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் சீரிஸாக மாறியிருக்கின்றன. எனவே, தற்போது அந்த 5 சீரிஸில் முதல் எலக்ட்ரிக் வாகன மாடலை வெளியிடவிருக்கிறது பிஎம்டபிள்யூ. இதன் பெட்ரோல் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில டிசைன்களை, இந்த எலெக்ட்ரிக் மாடலிலும் பிஎம்டபிள்யூ பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசரில் முகப்புப் பக்கத்தில் இலுமினேட் செய்யப்பட்ட கிரில் மற்றும் முகப்பு விளக்குகள் மட்டும் பளிச்சென்று தெரிய, காரின் மற்ற பக்கங்கள் நிழலாக இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ.
என்னென்ன வசதிகள்?
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் மற்றும் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் வீல் ட்ரைவ் வசதியுடன் பவருக்காக இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, 400 கிமீ ரேஞ்சு கொடுக்கக்கூடிய பேட்டரி பேக்கும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தப் புதிய மாடலை வரும் மே 24-ம் தேதி அந்நிறுவனம் வெளியிடவிருக்கும் நிலையில், அப்போதே விலை குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டாண்டர்டான வெர்ஷனுடன், ஸ்போர்ட்டியான M பெர்ஃபாமன்ஸ் வேரியன்டையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிடவிருக்கிறதாம்.