இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை
காலநிலை மாற்றத்தின் மோசமான எதிர்கால தீங்குகளைத் தடுக்க மனிதகுலத்திற்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று திங்களன்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. ஆனால் அதை செய்ய 2035ஆம் ஆண்டிற்குள் கார்பன் மாசுபாடு மற்றும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குறைக்க வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை 2040க்குள் கைவிட வேண்டும் என்று அப்பட்டமாக கூறிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
நாம் இன்னும் சரியான பாதையில் செல்லவில்லை: விஞ்ஞானி
2019 உடன் ஒப்பிடும்போது, 2035 ஆம் ஆண்டிற்குள் உலகம் அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வை 60% குறைக்க வேண்டும். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பமயமாதல் நிலையான 1.5 டிகிரி செல்சியஸை நாம் மிகவும் நெருங்கிவிட்டதால், காலநிலை மாற்றத்திற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1.5 டிகிரிக்குப் பிறகு, "ஆபத்துகள் குவியத் தொடங்கிவிடும்" என்று ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி மற்றும் இணை ஆசிரியரான பிரான்சிஸ் எக்ஸ். ஜான்சன் கூறியுள்ளார். "நாம் இன்னும் சரியான பாதையில் செல்லவில்லை, ஆனால் இதை மாற்றி அமைக்க தாமதமாகிவிடவும் இல்லை" என்று அறிக்கையின் இணை ஆசிரியரும் விஞ்ஞானியுமான அதிதி முகர்ஜி கூறி இருக்கிறார்.