சீனாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் குறிப்பிட்ட மாகாணங்களைச் சேர்ந்த அரசு நிறுவன ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மேற்கூறிய போது ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவை சீனாவில் உள்ள எட்டு மாகாணங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற நிறவனங்கள் அமல்படுத்தியிருக்கின்றன. நுட்பமான, ரகசியம் காக்கப்பட வேண்டிய துறைகளில் ஐபோன்கள் மற்றும் வெளிநாட்டு மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை தடை செய்து வருகிறது சீனா. மேலும், உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையே பயன்படுத்தவும் சீன அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்ட வருகிறார்கள்.
பொதுமக்களுக்கும் தடையா?
மேற்கூறிய ஐபோன் பயன்பாட்டுத் தடையானது சீன அரசு ஊழியர்களுக்கு மட்டுமே. அதுவும் பொது அறிவிப்பு அல்ல, குறிப்பிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் தன்னிச்சையாக விதித்த அறிவிப்புகளே. சீன மக்கள் ஐபோன்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும் எந்தத் தடையும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், சுயசார்பு நிலையை அடைய முயற்சிக்கும் சீனா முடிந்த அளவிற்கு அனைவரும் சொந்தத் தயாரிப்புகளை வாங்கவே ஊக்குவிக்கிறது. அது மட்டுமின்றி கடந்த ஆண்டுகளில், சீனாவில் பயன்பாட்டில் இருந்து வந்த பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் மாற்றான சீன தயாரிப்புகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.