கிறித்துமஸ் தாத்தா யார் தெரியுமா? - அவரது வரலாறு குறித்த தொகுப்பு
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான நபராக கருதப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த சில உண்மைகளை நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக, 'நல்ல பிள்ளைகளாக இருந்தால் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பார்' என்று பெற்றோர்கள் குழந்தைகளிடம் கூறுவது வழக்கம். சாண்டா க்ளாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா, வெள்ளை தாடி, தோளில் பரிசு மூட்டையுடன் பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் சவாரி செய்வார் என்றே நாம் அவரை உருவகப்படுத்தியுள்ளோம். பல புராண கதைகள் இவர் குறித்து வலம் வரும் நிலையில், வட துருவத்தில் வசிப்பதாக கூறப்படும் இவர், குழந்தைகளிடம் இருந்து அவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்கள் குறித்த கடிதத்தை பெற்றுக்கொள்வார்,
ஏழைகளுக்கு உதவிய துறவி செயின்ட் நிகோலஸ், பின்னாளில் சாண்டா க்ளாஸாக அறியப்பட்டார்
அதன் பின்னர் கிறிஸ்துமஸ் அன்று அந்த பரிசுகளை வழங்குவார். துருக்கியில் கிபி.280 காலக்கட்டத்தில் செயின்ட் நிகோலஸ் என்ற துறவி ஏழைகளுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் உதவிகளை செய்து வந்துள்ளார். அவரே பின்னாளில் சாண்டா க்ளாஸ் என்று அறியப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு கதையில், நெதர்லாந்தில் பிறந்ததாக கூறப்படும் சாண்டா க்ளாஸ், ஏழை மக்களுக்கு உதவும் நபர் என்றும், இவர் குறித்த கதைகள் 1700களில் அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், வாஷிங்டன் இர்வின் என்கிற எழுத்தாளர் 1809ம் ஆண்டில் ஓர் புத்தகத்தில், "சாண்டா க்ளாஸ் மெலிதான உடல் அமைப்பில், மான்கள் கொண்ட வாகனத்தில் பறப்பார், பரிசு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்குவார்" என்று கூறியுள்ளார்.