சிறந்த ஆசிரியர் முதல் குற்றவாளி வரை: வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் பின்னணி
செய்தி முன்னோட்டம்
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர், கலிபோர்னியாவின் டோரான்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையத்தை மீற முயன்ற இவர், பாதுகாப்பு அதிகாரி ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
பின்னணி
ஆலனின் கல்வி மற்றும் தொழில்முறை பின்னணி
கோல் தாமஸ் ஆலன், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் 2017 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியல் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர், சுயாதீன கேம் டெவலப்பர் மற்றும் ஆசிரியர் எனப் பன்முகத்திறன் கொண்டவராக அறியப்படுகிறார். இவர் தனியார் பயிற்சி மையமொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி, 2024 டிசம்பரில் மாதத்தின் சிறந்த ஆசிரியர் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்
தாக்குதல் மற்றும் கைது
தாக்குதலின் போது ஆலனிடம் ஷாட்கன், கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகள் இருந்துள்ளன. இவர் குறித்த ஹோட்டலிலேயே விருந்தினராகத் தங்கியிருந்ததாகவும், திட்டமிட்டே பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் டிரம்ப் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் இவரை ஒரு "தனி ஓநாய்" (Lone wolf) என்று விவரித்துள்ளனர். தற்போதைய நிலையில் இவருடைய தாக்குதலுக்கான தெளிவான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. இவர் மீது கூட்டாட்சி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சட்ட மீறல் மற்றும் அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சர்ச்சை
அரசியல் சர்ச்சைகள்
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வலதுசாரி ஆர்வலர் லாரா லூமர், தாக்குதல் நடத்தியவர் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவரின் அரசியல் பின்புலம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதாரமும் புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்படவில்லை.