வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கேரோலின் லீவிட் பதவி விலகல்: ட்ரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளராக பணியாற்றி வந்த 28 வயதான கேரோலின் லீவிட், ஆகஸ்ட் மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த கேரோலின் லீவிட், மகப்பேறு விடுமுறைக்குப் பின் மீண்டும் பணிக்குத் திரும்பினார். எனினும், மிகக் கடுமையான பொறுப்புகள் கொண்ட இந்த உயர் பதவியையும், தாய்மையையும் ஒரே நேரத்தில் கவனிப்பது தனக்குச் சவாலாக இருப்பதாகவும், தனது இரண்டு குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் தெரிவித்து அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.
அடுத்தகட்ட பணி
ட்ரம்ப்பின் புகழாரம் மற்றும் அடுத்தகட்ட பணி
ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியான அறிக்கையில்,"வெள்ளை மாளிகையின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பத்திரிகைச் செயலாளர்களில் கேரோலின் லீவிட்டும் ஒருவர். அவரது இந்த முடிவை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு மதிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை பணியிலிருந்து விலகினாலும், ட்ரம்ப்பின் முதன்மை வெளி ஆலோசகராகவும், 'MAGA' அமைப்பின் முக்கியப் பிரதிநிதியாகவும் கேரோலின் தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரியில் தனது 27-வது வயதில் பொறுப்பேற்ற கேரோலின், அமெரிக்க வரலாற்றிலேயே மிக இள வயதில் வெள்ளை மாளிகைப் பத்திரிகைச் செயலாளரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவரது பதவிக் காலத்தில், பாரம்பரிய செய்தி ஊடகங்களுக்கு அப்பாற்பட்டு டிஜிட்டல் ஊடகங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் புதிய செய்தித் தளங்களுக்கு வெள்ளை மாளிகை செய்திச் சந்திப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.