LOADING...
நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்; பல கட்ட பாதுகாப்பை தாண்டி டிரம்ப்பை எப்படி தாக்க வந்தார் மர்ம நபர்?
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்; பல கட்ட பாதுகாப்பை தாண்டி டிரம்ப்பை எப்படி தாக்க வந்தார் மர்ம நபர்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 27, 2026
07:00 am

செய்தி முன்னோட்டம்

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு' (WHCD) விருந்து நிகழ்ச்சியில், ஆயுதங்களுடன் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தற்போது தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு ஷாட்கன், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகளுடன் ஹோட்டலுக்குள் நுழைய முடிந்தது. பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மெயின் கேட்டிலேயே சோதனை நடத்தப்படாமல், நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்கு முன்பே சோதனை நடத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

விவரங்கள்

பாதுகாப்பு வளையத்தை மீறியது எப்படி?

சந்தேக நபர் அதே ஹோட்டலில் அறை எடுத்திருந்ததால், ஒரு விருந்தினராக எவ்வித சோதனையுமின்றி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் மெட்டல் டிடெக்டர் வழியாக செல்ல முயன்றபோது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். உடனடியாக பாதுகாப்புப் படையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். "நான் ஒரு ஈரான் ஏஜெண்டாக இருந்திருந்தால், இவ்வளவு ஆயுதங்களுடன் உள்ளே வந்ததை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள்" என்று அவர் எழுதியுள்ள குறிப்பு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்

அரசியல் தலைவர்களின் கண்டனம்

நியூயார்க் பிரதிநிதி மைக் லாலர் மற்றும் ரிச்சி டோரஸ் உள்ளிட்ட இரு கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "அதிபர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்திருப்பது மன்னிக்க முடியாதது" என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், அதிபர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு வளையம் தனது பணியைச் சரியாகச் செய்ததாகவும் இடைக்கால அட்வோர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தெரிவித்துள்ளார்.

Advertisement

அச்சுறுத்தல்

ஈரான் அச்சுறுத்தல் மற்றும் பின்னணி

ஈரானுடனான போர் மற்றும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், அதிபரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பிய டிரம்ப், இந்தச் சம்பவத்திற்கு பிறகு தனது பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை காலையில் இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை ரகசியப் போலீஸார் (Secret Service) சமர்ப்பிக்க உள்ளனர்.

Advertisement