பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும். 1960கள் வரை, பூட்டானில் உள்ள மாணவர்கள் தனியார் கல்வியைப் பெற பெரும்பாலும் புத்த மடாலயங்களே சார்ந்து இருந்தனர். 1950களில் பூட்டான் முடியரசு கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று நினைத்தது. இதனையடுத்து, இந்திய கல்வி முறையை தழுவ அவர்கள் முடிவு செய்தனர். 1962 ஆம் ஆண்டில், கேரளாவின் ஆரம்பக் கல்வி முறையின் தரத்தில் ஈர்க்கப்பட்ட பூட்டான் அரசாங்கம், 20 கேரள ஆசிரியர்களை பூட்டான் கல்வி முறையை மாற்றி அமைக்க நியமித்தனர். இந்த 20 கல்வியாளர்களே பின்னர் பூட்டான் நவீன கல்வி முறையின் முன்னோடிகளாக மாறினர்.
பூட்டான் கல்வி முறையில் இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது: பூட்டான் அரசர்
"இவர்கள் பூடான் கல்விக்காக தங்கள் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்த மிகவும் அர்ப்பணிப்புள்ள, நேர்மையான ஆசிரியர்கள் ஆவர். குக்கிராமப்புறங்களுக்கு சென்று அவர்கள் அர்ப்பணிப்புடன் கற்பிக்காமல் இருந்திருந்தால், பூட்டான் பள்ளிகளுக்கு தற்போதைய உயர்தர கல்வி கிடைத்திருக்காது." என்று 'தி கால்: ஸ்டோரீஸ் ஆஃப் எஸ்டர் இயர்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் பூட்டானின் நவீன கல்வி முறையை நிறுவிய பெருமைக்குரிய பாதிரியார் வில்லியம் மேக்கி ஆவார். பி.பி.நாயர், எம்.பிரசாத், ஜி.பி.குருப், எம்.கே.ஜி கைமல், ஆர்.சிவதாசன், திருமதி ஆர் கிருஷ்ணன் ஆகியோர் பூட்டானுக்கு சென்ற 20 கேரள ஆசியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். "பூட்டான் கல்வி முறையில் இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது" என்று தற்போதைய பூட்டான் அரசர் ஜிக்மே வாங்சுக் முன்பு கூறியிருந்தார்.