இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார். "நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம். கனடிய அதிகாரிகளின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இந்தியாவுடன் நாங்கள் பேசுவோம். ஏனெனில் இராஜதந்திர உரையாடல்கள் ரகசியமாக இருப்பது தான் சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று கனேடிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
"இந்தியாவுடன் பொறுப்புடனும் ஆக்கப்பூர்வமாகவும் பேசுவோம்": ஜஸ்டின் ட்ரூடோ
அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகும் கனேடிய தூதர்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா மிரட்டியதாக செய்திகள் கூறுகின்றன. மொத்தம் 62 கனட அதிகாரிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அறிக்கைக்கு இந்தியாவும் கனடாவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க தனது நாடு விரும்பவில்லை என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்தார். கனடா தொடர்ந்து "இந்தியாவுடன் பொறுப்புடனும் ஆக்கப்பூர்வமாகவும் பேசும்" என்று அவர் கூறியுள்ளார். மேலும், "கனேடிய குடும்பங்களுக்கு உதவ இந்தியாவில் கனேடிய அரசு இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.