'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
நேற்று ஐநா சபையில் பேசிய இந்தியா, காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறி பாகிஸ்தானை கடுமையாக சாடியது. ஒரு நாளுக்கு முன்பு தான், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்(UNGA) 78வது அமர்வில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்தியா அவரது உரைக்கு பதிலளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தூண்டுவதற்காக சர்வதேச மன்றங்களை மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது என்று நேற்று கூறிய இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி" என்று தெரிவித்தார்.
ஐநா சபையில் இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த மன்றத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது. தனது மனித உரிமை மீறல்களில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் அவ்வாறு செய்கிறது என்பதை ஐநா சபையின் உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள்(UTs) இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை. தெற்காசியாவில் அமைதி நிலவ, பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மூன்று இருக்கிறது. ஒன்று- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவது. இரண்டு- இந்தியாவில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை காலி செய்வது. மூன்று- பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை நிறுத்துவது.