அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளுள், 40 நாடுகளை சேர்ந்த குடியுரிமை பெற்ற மக்கள், அமெரிக்காவிற்கு 3 மாதங்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த பட்டியலில் தற்போது இஸ்ரேல் நாடும் இணைந்துள்ளது. இதன்படி வரும் 30ம் தேதி முதல் இஸ்ரேல் மக்கள் விசா இல்லாமல், அமெரிக்க பயணத்தினை மேற்கொள்ள முடியும். கடந்த செப்.,27ம் தேதி, அமெரிக்கா விசா தள்ளுபடி திட்டத்தில் இஸ்ரேலை அனுமதிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இஸ்ரேல் நாட்டிற்கு தங்களது முழு ஆதரவினை தெரிவித்த அமெரிக்க அதிபர்
அதனை தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு, காசா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறியதாக தெரிகிறது. அதன் பின்னர், ஹமாஸ் ஆயுதக்குழு படையினர் அப்பகுதியை கைப்பற்றி ஆட்சியை பிடித்ததாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிலான கொடூர தாக்குதலை, ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய காரணத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்கு தங்களது முழு ஆதரவினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.