இந்தியர்களுக்கு விசா கிடைக்குமா? 75 நாடுகளுக்குத் தடை விதித்த டிரம்ப் அரசு; முழு லிஸ்ட் இதோ
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வரும் ஜனவரி 21, 2026 முதல் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பொது நலத்திட்டங்களை அதிகப்படியாகப் பயன்படுத்தும் நாடுகளைக் கண்டறிந்து, இந்தத் தடையை விதித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தடையால் ரஷ்யா, ஈரான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், நைஜீரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 75 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அமெரிக்க மக்களின் செல்வத்தைச் சுரண்டும் விதமாக புதிய குடியேறிகள் அமையக்கூடாது என்பதை உறுதி செய்யும் வரை இந்தத் தடை நீடிக்கும்" என்று வெளியுறவுத் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவிற்குப் பாதிப்பு உண்டா?
இந்தியப் பயணிகளுக்கு ஒரு நிம்மதியான செய்தி என்னவென்றால், அமெரிக்காவின் விசா தடையால் பாதிக்கப்பட்ட 75 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து கிரீன் கார்டு அல்லது நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தத் தடையால் நேரடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன. இந்தத் தடையானது குடியேற்ற விசாக்களுக்கு (Immigrant Visas) மட்டுமே பொருந்தும். தற்காலிகமாக அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் (Tourist Visa), மாணவர்கள் (Student Visa) மற்றும் வணிக ரீதியாகச் செல்பவர்களுக்கு (Business Visa) இந்தத் தடை விதிக்கப்படவில்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக வருபவர்களுக்கும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.