ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தாக்குதல் எச்சரிக்கை, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு ரகசியக் கடிதம் எழுதிய ஜே.டி.வேன்ஸ்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய ராணுவத் தாக்குதலை நடத்த பரிசீலித்து வரும் வேளையில், முடங்கியுள்ள தூதரகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாய் என்பவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே முறையான அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முதற்கட்டக் சூழலை உருவாக்குவதே இக்கடிதத்தின் பிரதான நோக்கமாகும். இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தான் ஜே.டி.வேன்ஸை அனுப்பவில்லை என மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப், ஈரானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவது தொடர்பான உரையாடலே அது எனக்கூறியுள்ளார்.
நிலைப்பாடு
ஈரானின் நிலைப்பாடும் புதிய தாக்குதல் அச்சுறுத்தலும்
ஈரானிய தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும், IRGC முன்னாள் தளபதியுமான மொஹ்சென் ரெசாய், அமெரிக்காவின் அடிப்படை நிபந்தனைகள் நிறைவேறும் வரை பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3 அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது "குறுகிய, தீவிரமான ராணுவ நடவடிக்கை" மேற்கொள்ளப்படலாம் என வளைகுடா நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நாட்டின் ஆயுதப் படைகள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் அதே வேளையில், தூதரக பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கத்தார் மூலம் ஈரான் முன்மொழிந்த 7 நாள் அமைதித் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.