அமெரிக்காவில் H-1B மற்றும் EAD விதிகளில் மாற்றம்: இந்திய தொழில்முறையாளர்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய முட்டுக்கட்டை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழில்முறையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இரண்டு புதிய கடுமையான குடியேற்றக் கொள்கை மாற்றங்களை முன்னெடுத்துள்ளது. H-1B விசா நீட்டிப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த Deference கொள்கையை ரத்து செய்வதற்கான முன்மொழிவு மற்றும் பணி அனுமதிப் பத்திரங்களின் (EAD) தானியங்கி நீட்டிப்பை (540-day Auto-extension) நிரந்தரமாக ரத்து செய்யும் நடைமுறை ஆகியவை இதில் முதன்மையானவை.
EAD
EAD பணி அனுமதி தானியங்கி புதுப்பித்தல் நிரந்தர ரத்து
அமெரிக்காவில் வேலை செய்வதற்கான வேலை அனுமதி ஆவணம் முடிவடையும் தருவாயில், புதிய ஆவணத்திற்காக விண்ணப்பித்தவர்கள் முந்தைய விதிகளின்படி 540 நாட்கள் வரை தொடர்ந்து பணிபுரிய சட்டப்பூர்வ அனுமதி இருந்தது.
இனிவரும் நாட்களில், புதுப்பித்தல் விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தாலும், பழைய EAD காலாவதியான மறுதினமே சம்பந்தப்பட்ட நபர்கள் பணிபுரிவதற்கான உரிமையை இழப்பர். புதிய அட்டை கைக்குக் கிடைக்கும் வரை அவர்கள் பணியைத் தொடர முடியாது.
இந்த நடவடிக்கை H-1B விசா வைத்திருப்பவர்களின் துணைகளான (H-4 EAD) இந்திய பெண்களை பெருமளவில் பாதிக்கும்.
தங்களின் எவ்விதத் தவறும் இன்றி, வெறுமனே பரிசீலனை தாமதங்கள் காரணமாகவே பலர் வேலையையும் வருமானத்தையும் இழக்க நேரிடும்.
டீஃபெரன்ஸ்
H-1B விசா நீட்டிப்பில் 'டீஃபெரன்ஸ்' கொள்கை ரத்து
தற்போது பயன்பாட்டில் உள்ள நடைமுறைப்படி, ஒருவர் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும்போது அவரது H-1B விசாவை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விண்ணப்பித்தால், முந்தைய விசா ஒப்புதலை அடிப்படையாக கொண்டு பரிசீலனையின்றி எளிதாக நீட்டிப்பு வழங்கப்படும்.
டிரம்ப் நிர்வாகம் இந்த 'டீஃபெரன்ஸ்' கொள்கையை முழுமையாக ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதனால், ஒரு நபர் 10 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், ஒவ்வொரு விசா நீட்டிப்பின் போதும் அவரது தகுதிகள் புதிதாக முதல்முறையாக விண்ணப்பிப்பவரை போலவே கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த புதிய விதியால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணியாளர் மாற்றங்களால் சுமார் $450 மில்லியன் வரை இழப்பு ஏற்படும் எனவும், $14.5 மில்லியன் ஊதிய வரி இழப்பு ஏற்படும் எனவும் DHS கணித்துள்ளது.
விளக்கம்
டிரம்ப் நிர்வாகத்தின் விளக்கம்
பணி அனுமதி தாளைத் தானாக நீட்டிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகரிக்கும் என்றும், தவறான வழிகளில் விசா பெற்றவர்கள் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பதைத் தடுக்கவே இந்த 'டீஃபெரன்ஸ்' கொள்கை ரத்து செய்யப்படுவதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் விசா நீட்டிப்பு கோரும் சுமார் 2 லட்சம் இந்தியத் தொழில்முறையாளர்களை இந்த முடிவுகள் நேரடியாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.