
டிரம்பின் தனிப்பட்ட கோபமே இந்தியா மீதான வரிகளுக்குக் காரணம்; அமெரிக்க நிறுவனம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வர்த்தகச் சேவை நிறுவனமான ஜெஃப்ரீஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி விதிப்புக்குக் காரணம் அதிபர் டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட கோபமே என்று கூறப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களை விட, பாகிஸ்தானுடனான இந்தியாவின் விரோதப் போக்கைத் தீர்க்கத் தம்மைக் மத்தியஸ்தம் செய்ய அனுமதிக்க இந்தியா மறுத்ததே இந்த வரிவிதிப்புக்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மறுப்பு, டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தனது கோரிக்கையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை மறுத்தது. இதனால் ஏற்பட்ட கோபமே ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த வரிவிதிப்புக்கு அடிப்படைக் காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது.
மத்தியஸ்தம்
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விரும்பாத இந்தியா
இந்தியா, பாகிஸ்தானுடனான தனது நீண்டகாலப் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததே இதற்குக் காரணமாகும். பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என தெரிந்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த அறிக்கையில் மற்றொரு முக்கியப் பிரச்சினை விவசாயம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகம், இந்தியாவின் பரந்த விவசாயம் மற்றும் பால் சந்தைகளை அணுகுவதற்கு அதிக அனுமதி கோரி வருகிறது. இது சுமார் 25 கோடி இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.