Loading...
ரஷ்யா மீதான தடை மசோதா: இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரி அச்சுறுத்தலை குறைத்தது அமெரிக்க செனட்
திருத்தப்பட்ட புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது

ரஷ்யா மீதான தடை மசோதா: இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரி அச்சுறுத்தலை குறைத்தது அமெரிக்க செனட்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
07:29 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த அபராத இறக்குமதி வரி அச்சுறுத்தலை கணிசமாக குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பு எம்.பி.க்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட சட்டம், உக்ரைன் போருக்கு பிந்தைய உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

வரி குறைப்பு

500% வரியில் இருந்து 100% ஆகக் குறைப்பு

ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும், மாஸ்கோவிற்கு செல்லும் வருவாயைத் தடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது முன்னதாக 500 சதவீத அசுர வரி விதிக்க முன்மொழியப்பட்டது.

ஆனால், உலகளாவிய பொருளாதார தாக்கங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய திருத்தப்பட்ட மசோதாவில் இந்த அதிகபட்ச வரி வரம்பு 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா முதன்முதலில் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் முன்மொழியப்பட்டது.

அவர் உக்ரைனுக்கு சென்றிருந்தபோது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுடன் இந்த சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு மற்றும் விலக்கு

இலக்கு வைக்கப்படும் முக்கிய நாடுகள் மற்றும் விலக்குகள்

செனட் உதவியாளர்களின் கூற்றுப்படி, ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த புதிய சட்டத்தின் முக்கிய இலக்குகளாக உள்ளன.

அதேபோல் இயற்கை எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.

இருப்பினும், ரஷ்யாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்து, தங்களின் தேவையை படிப்படியாக குறைத்து வரும் நாடுகளுக்கு இந்த மசோதாவில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறையானது ஜப்பான், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு பயனளிக்கும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

அதிகாரம்

டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம்

வரிகள் தவிர, மேற்கத்திய நாடுகளின் கடல்சார் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படும் ரஷ்யாவின் 'நிழல் கப்பல் படை', ரஷ்ய மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் யமால் எல்என்ஜி, ஆர்க்டிக் எல்என்ஜி போன்ற முக்கிய எரிசக்தி திட்டங்களுக்கும் இந்த மசோதா தடை விதிக்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு தேவை என்று கருதினால், இந்தத் தடைகளைத் தற்காலிகமாகத் தள்ளுபடி செய்யும் பிரத்யேக அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த புதிய திருத்தம் வழங்குகிறது.

தற்போது 26 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த மசோதா, வெள்ளை மாளிகையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT