10 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கால தொல்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி அலுவலகம் கடந்த புதன்கிழமையன்று, அமெரிக்காவில் உள்ள 10 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட 1,400 தொல்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக அறிவித்தது. திரும்பப் பெறப்பட்ட கலைப்பொருட்களில் 11 ஆம் நூற்றாண்டு மணற்கல் சிற்பம் ஒரு வான நடனக் கலைஞரின் சிற்பம் ஆகும். இது மத்திய இந்தியாவிலிருந்து லண்டனுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சட்டவிரோதமாக விற்கப்பட்டு நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்க்கு நன்கொடை அளிக்கப்பட்டது. குற்றவாளிகளான நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளை நெட்வொர்க்குகள் பற்றிய பல விசாரணைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது. சுபாஷ் கபூர் 2011இல் ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது இந்தியா மற்றும் அமெரிக்காவில் வழக்குகள் உள்ளன.
திரும்பிய பொருட்களில் குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள்
1960களில் ராஜஸ்தானில் இருந்து திருடப்பட்டு, பின்னர் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட தனேசர் அன்னை தேவி சிலை, இந்தியாவுக்குத் திரும்பிய மற்றொரு முக்கிய கலைப்பொருள் ஆகும். நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், நாடு திரும்பிய பொருட்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷனின் நியூயார்க் பிரிவுக்கு பொறுப்பான சிறப்பு முகவரான வில்லியம் வாக்கர், "வரலாற்றின் மிகப் பெரிய குற்றவாளிகளில் ஒருவரால் கடத்தப்பட்ட பழங்காலப் பொருட்கள் மீதான பல ஆண்டு சர்வதேச விசாரணையில் மற்றொரு வெற்றி" என்று கூறினார். கடந்த ஜூலை மாதம், இந்தியாவும் அமெரிக்காவும் கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முதல் கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.