LOADING...
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்; பின்னணி என்ன?
60 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்; பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2026
11:16 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement) முதற்கட்டப் பணிகளை இறுதி செய்வதற்கான தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், வாஷிங்டனிடமிருந்து ஒரு பெரும் வர்த்தக அதிர்ச்சி வெளியாகியுள்ளது. கட்டாயத் தொழிலாளர்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா உட்பட 60 உலக நாடுகள் மீது கடுமையான வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைத்துள்ளது.

வர்த்தகச் சட்டம்

அமெரிக்க வர்த்தக சட்டம் 301-ன் கீழ் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 'பிரிவு 301'-ன் கீழ், இந்த 60 நாடுகளின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் அநியாயமானவை என்றும், அவை அமெரிக்காவின் உள்நாட்டு வர்த்தகத்தை பெரிதும் பாதிப்பதாகவும் USTR தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய USTR தூதர் ஜேமிசன் கிரீர், "எங்கள் மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் கட்டாயத் தொழிலாளர் முறையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு உலகளவில் ஒரு சமமற்ற போட்டிச் சூழலை உருவாக்குகிறது. இனி இந்த முரண்பாடுகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி வரி

10% முதல் 12.5% வரை கூடுதல் இறக்குமதி வரிப் பரிந்துரை

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களின் மீதும் கூடுதல் வரி விதிக்க USTR பரிந்துரைத்துள்ளது. 10% கூடுதல் வரி: ஏற்கனவே அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களை (USMCA போன்றவை) மேற்கொண்டு, கட்டாயத் தொழிலாளர் இறக்குமதித் தடைகளை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளுக்கு 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படலாம். 12.5% கூடுதல் வரி: எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாத, வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இதர நாடுகளின் அனைத்துப் பொருட்களுக்கும் 12.5 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பட்டியல்

பட்டியலில் உள்ள 60 முக்கிய நாடுகள் எவை?

கடந்த மார்ச் 2026-ல் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட இந்த விரிவான விசாரணையின் முடிவில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டாயத் தொழிலாளர் தயாரிப்புகளைத் தடுக்கத் தவறிய நாடுகள் என இந்தியா, சீனா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தடையை அமல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சந்தை அணுகல், விவசாயம் மற்றும் வரி விதிப்பு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடிப் பரிந்துரை இந்தியப் ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement