LOADING...
அதிபர் டிரம்ப்பின் 'Gold Card' விசா திட்டம் இன்று முதல் அமல்: தகுதி மற்றும் முக்கிய விவரங்கள்
Trump Gold Card விசா திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

அதிபர் டிரம்ப்பின் 'Gold Card' விசா திட்டம் இன்று முதல் அமல்: தகுதி மற்றும் முக்கிய விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 11, 2025
08:01 am

செய்தி முன்னோட்டம்

சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட "தங்க அட்டை" (Trump Gold Card) என்றழைக்கப்படும் விசா திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரண திறமைகள் கொண்ட வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு ஈர்க்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்கள் அமெரிக்காவில் நிரந்தர சட்டப்பூர்வ குடியுரிமை (Residency) பெற வேண்டுமென்றால், அவர்கள் $1 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, $2 மில்லியன் முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு விசா ஆதரவு (Sponsor) வழங்கலாம். இது "கார்ப்பரேட் தங்க அட்டை" (Trump Corporate Gold Card) என்று அழைக்கப்படுகிறது.

நோக்கம்

Gold card திட்டத்தின் நோக்கம் மற்றும் தகுதி நிபந்தனைகள்

இத்திட்டத்தின் மூலம் $100 பில்லியனுக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டு, அந்த பணம் வரி குறைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "மிக உயர்ந்த நிலையில் உள்ள அசாதாரண நபர்களை" ஈர்த்து, அவர்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்- அவர்கள் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமைக்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவராகவும், விசா கிடைக்கப்பெறுபவராகவும் இருக்க வேண்டும். எனினும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்ற காரணங்கள் ஏற்பட்டால், இந்த அட்டை ரத்து செய்யப்படலாம். இது தவிர $5 மில்லியன் முதலீட்டிற்கான "பிளாட்டினம் அட்டை" திட்டமும் விரைவில் வரவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Advertisement