'விரைவில் முஸ்லிம் நகரமாகும் பாரிஸ்': பிரான்ஸ் கலவரம் குறித்து அதிபர் டிரம்ப் சாடல்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் வாழ்க்கை செலவின உயர்வைக் கண்டித்து வெடித்துள்ள வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேக்ரான் தனது அறிவுரைகளைக் கேட்டிருந்தால் இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடற்ற வகையில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்கப்பட்டது மிகப்பெரிய தவறு என விமர்சித்துள்ளார்.
குற்றசாட்டு
"விரைவில் முஸ்லிம் நகரமாகும் பாரிஸ்": டிரம்ப் குற்றசாட்டு
"உலகில் உள்ள அனைவரும் பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பாரிஸ் நகரம் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது. நான் பல ஆண்டுகளுக்கு முன்பே மேக்ரானை எச்சரித்தேன், ஆனால் அவர் கேட்கவில்லை" எனத் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசு உடனடியாகத் தனது எல்லைகளை மூடி, நாட்டின் கட்டுப்பாட்டைத் தனது கைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊரடங்கு
பிரான்சில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரம்
டொனால்ட் டிரம்பின் இந்த சர்ச்சை கருத்துக்கள் வெளியாகியுள்ள அதே வேளையில், பாரிஸ், லில்லி, நைஸ் போன்ற முக்கிய நகரங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளும், பொதுக் கூட்டங்களுக்கான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கலவரங்களின் போது சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,000 காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 3,000 சில்லறை வணிகக் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்துத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் மேக்ரான், அமைதியான முறையில் போராடுபவர்களின் கோரிக்கைகள் கேட்கப்படும் என்றும், அதேவேளையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கையைச் சந்திப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.