ஏஐ மாடல்களை முடக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'கில் சுவிட்ச்' சட்ட மசோதா தாக்கல்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை உடனடியாக முடக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் 'ஏஐ கில் சுவிட்ச்' (AI Kill Switch Act) என்ற புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் எம்பி டெட் லியூ மற்றும் குடியரசுக் கட்சியின் எம்பி நதானியேல் மோரன் ஆகியோர் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்ட மசோதாவை வியாழக்கிழமை (ஜூலை 23) அறிமுகப்படுத்தினர்.
ஏஐ நிறுவனங்கள்
ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் வீழ்ச்சி
சமீபத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ மாடல்கள் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, முக்கிய கணிப்பொறி குறியீட்டுத் தரவுத்தளத்தை ஹேக் செய்ததாக ஒப்புக்கொண்டன.
இதேபோல ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய மாடல்களும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கியதால், அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் தடுக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இத்தகைய ஆபத்தான சம்பவங்களே புதிய சட்டம் இயற்றப்பட முதன்மை காரணமாக அமைந்தன.
அதிகாரம்
உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முழு அதிகாரம்
இந்த புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆபத்தான ஏஐ மாடல்களை உடனடியாக முடக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடைக்கும்.
மேலும் ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்கள், தங்களது மாடல்களைத் தற்காலிகமாக நிறுத்தவோ அல்லது முழுமையாக முடக்கவோ தேவையான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை முன்கூட்டியே தங்களது அமைப்பில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த சட்ட மசோதா வலியுறுத்துகிறது.
ஏஐ ஆபத்து
ஏஐ ஆபத்துகள் குறித்த அரசுக்குத் தகவல் தெரிவித்தல்
இதுமட்டுமின்றி, ஏஐ நிறுவனங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் குறித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், "தற்போது ஏஐ துறைக்கு வேகப்படுத்தும் ஆக்ஸிலரேட்டர் மட்டுமே உள்ளது.
அவசரகாலத்தில் நிறுத்துவதற்கான பிரேக் சிஸ்டம் இல்லை." என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த கில் சுவிட்ச் சட்டம் ஏஐ வளர்ச்சியில் மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடு
மனிதக் கட்டுப்பாட்டில் ஏஐ தொழில்நுட்பம்
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது ராணுவ நடவடிக்கைகளில் ஏஐ தொழில்நுட்பங்களை அதிகளவில் இணைத்து வரும் நிலையில், இத்தகைய அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறுவது உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர்.
மனிதன் உருவாக்கிய தொழில்நுட்பம் எப்போதும் மனிதனின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றும், இதற்கு அமெரிக்காவின் பல முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.