LOADING...
சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதல்

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 20, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உள்கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

எச்சரிக்கை

தாக்குதலின் பின்னணியும் அமெரிக்காவின் எச்சரிக்கையும்

டிசம்பர் 13 ஆம் தேதி பால்மைராவில் அமெரிக்க மற்றும் சிரியப் படைகளின் வாகன அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கர்களைக் குறிவைப்பவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று ஹெக்செத் எச்சரித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பயங்கரவாதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வான்வழி தாக்குதல்

வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு

சுமார் 70 க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நடவடிக்கையில் F-15 போர் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹிமார்ஸ் (HIMARS) ராக்கெட் ஏவுதளங்கள் பயன்படுத்தப்பட்டன. சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷாரா இந்த ராணுவ நடவடிக்கைக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் சிரியா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடையாளமாக இந்த ராணுவ ஒத்துழைப்பு பார்க்கப்படுகிறது.

Advertisement