கடல் முற்றுகையைத் தொடர்ந்து நிலப்பரப்பிலும் முடக்கம்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட் அமைப்பு
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் தற்காப்புத் தடைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அந்நாட்டின் நிலப்பரப்பு வழிகள் மற்றும் எல்லைப் பாதைகள் வழியாக நடைபெறும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த 20 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் பணிக்குழுவை அமெரிக்க ராணுவம் நிறுவியுள்ளது. ஈரானிய எல்லைகள் மற்றும் காஸ்பியன் கடல் வழியாக மேம்படுத்தப்பட்ட ஆயுத அமைப்புகள், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் சட்டவிரோத வருவாய் வரத்துகள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துவதே இப் பணிக்குழுவின் முதன்மை நோக்கமாகும். கூடுதல் விபரங்கள் இங்கே:-
டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட்
ஃப்ளோரிடாவில் இயங்கும் 'டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட்' சிறப்புப் படை
அமெரிக்க மத்திய கட்டளைக் தலைமையகத்தின் (US CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், ஃப்ளோரிடாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராணுவ மற்றும் சிவில் நிபுணர்கள் அடங்கிய இந்த புதிய படை, அமெரிக்க அரசின் பிற தற்காப்பு முகமைகளுடன் இணைந்து செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளை மீண்டும் மறுசீரமைப்பதையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதையும் முழுமையாகத் முடக்குவதற்கு இப் புதிய நடைமுறை பெரிதும் உதவும் எனப் பிராட் கூப்பர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடற்படை முற்றுகை
கடற்படை முற்றுகையின் தொடர்ச்சியாக விரிவடையும் நிலப்பரப்புக் கட்டுப்பாடுகள்
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழலின் போது, சர்வதேச அளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் ஈரான் தடைகளை விதித்தது.
இதற்கு பதிலடியாக அமெரிக்கக் கடற்படை ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி இரும்புத் திரை முற்றுகையை ஏற்படுத்தியது.
இந்த கடல்சார் முற்றுகையின் காரணமாக ஈரானின் சுமார் $25 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தற்காப்புத் துறை அறிவித்துள்ளது.
காஸ்பியன் கடல்
காஸ்பியன் கடல் மற்றும் அண்டை நாடுகளுடனான வர்த்தக நெரிசல்
கடல்சார் தடைகளைத் தாண்டி ஈரான் தங்களது வர்த்தகம் மற்றும் ஆயுத கொள்முதல்களை சாலை மற்றும் ரயில் வழிகள் மூலமாகவும், காஸ்பியன் கடல் வழியாகவும் மாற்றி அமைத்து வந்தது.
தற்போது அமெரிக்காவின் டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட் வருகையால், ஈரானின் அண்டை நாடுகளுடனான நில எல்லை வர்த்தகமும் தீவிரக் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்படுகிறது.
இதன் மூலம் ஈரானின் ராணுவ வலிமை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை முழுமையாக முடக்கும் இறுதிக்கட்ட அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.