ஈரான் ஒரு தோற்கடிக்கப்பட்ட நாடு; பேச்சுவார்த்தை தொடங்கும் வேளையில் சீண்டிய டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
உலக நாடுகளின் நீண்டகால எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இரு நாட்டுப் பிரதிநிதிகளும் நேரடியாகச் சந்திக்காமல், பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் மறைமுகமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இரு நாட்டு அதிகாரிகளுடனும் தனித்தனியாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.
டிரம்ப் சீண்டல்
ஈரான் ஒரு தோல்வியடைந்த தேசம்
பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையிலும், ஈரான் மீதான தனது கடுமையான நிலைப்பாட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் தளர்த்தவில்லை. ஒரு பேட்டியில், ஈரானை ஒரு தோல்வியடைந்த நாடு என்று அவர் வர்ணித்துள்ளார். மேலும், "இந்தப் பேச்சுவார்த்தைகள் நாங்கள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றால், நிலைமையை மீண்டும் பழையபடி மாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தரப்பு விளக்கம்
லெபனான் போர் நிறுத்தம் ஒரு காரணம்
ஈரானின் 'ஃபார்ஸ்' மற்றும் 'தஸ்னிம்' செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறைந்ததைக் கருத்தில் கொண்டே இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தரமாக்குவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
தீர்வு
தீர்வு கிடைக்குமா?
அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் ஈரான் தரப்பில் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. அணு ஆயுதத் தடை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்துச் சுதந்திரம் ஆகிய இரண்டு முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படுமா என்பதுதான் சர்வதேசச் சந்தைகளின் கவலையாக உள்ளது. இந்த ஒரு வார காலப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தை மட்டுமின்றி, உலகப் பொருளாதாரத்தின் நிலையையும் தீர்மானிக்கப் போகிறது.