வயசானவங்களுக்கு மட்டும் தான் வரும்னு நினைக்காதீங்க! 40 வயதிற்கு முன்பே தாக்கும் பார்க்கின்சன் நோய்; அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகள்
செய்தி முன்னோட்டம்
பார்க்கின்சன் நோய் என்றாலே அது நரைமுடி கொண்ட முதியவர்களுக்கு மட்டுமே வரும் ஒரு நரம்பியல் குறைபாடு என்ற எண்ணம் பொதுமக்களிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இது வயதானவர்களுக்கு அதிகம் வரும் பாதிப்பு என்றாலும், இளைஞர்களையும் இது தப்பவிடுவதில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி. அவருக்கு 42 வயதிலேயே இந்த நோய் கண்டறியப்பட்டது. ஆனால், அவரது 36 வயதிலேயே பேச்சு மெதுவாவதும், திக்கிப் பேசுவதும் போன்ற ஆரம்பகால அறிகுறிகள் தென்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
இளைஞர்களைத் தாக்கும் பார்க்கின்சன்: காரணங்கள் என்ன?
பொதுவாக 50 வயதிற்கு மேல்தான் இந்த நோய் கண்டறியப்படுகிறது. இருப்பினும், 40 வயதிற்கு முன்பே இந்த நோய் ஒருவரைத் தாக்கினால் அதனை 'யங்-ஆன்செட் பார்க்கின்சன்' (Young-onset Parkinson's) என்று அழைக்கிறார்கள். மூளையில் உள்ள செல்கள் 'டோபமைன்' (Dopamine) எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் திறனை இழக்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இளைஞர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்குப் பெரும்பாலும் மரபணு ரீதியான காரணங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அறிகுறிகள்
ஆரம்பகால அறிகுறிகள்: நாம் கவனிக்கத் தவறுவது என்ன?
பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தொடங்கும். தொடக்கத்தில் இவை சாதாரண சோர்வு அல்லது மன அழுத்தம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. கவனத்தில் கொள்ளவேண்டிய அறிகுறிகள் பின்வருமாறு:- கைகள், கால்கள் அல்லது தாடையில் ஏற்படும் லேசான நடுக்கம். தசைகளில் ஏற்படும் இறுக்கம் மற்றும் நடக்கும்போது கைகளை வீசி நடக்காத நிலை. அன்றாட வேலைகளில் வேகம் குறைதல் மற்றும் உடலின் சமநிலை பாதிப்பு. கையெழுத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தூக்கக் கோளாறுகள்.
சிகிச்சை
சிகிச்சை மற்றும் மேலாண்மை
பார்க்கின்சன் நோய்க்கு இதுவரை நிரந்தரத் தீர்வு கண்டறியப்படவில்லை. இருப்பினும், தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் இதனைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். உடலில் குறைந்திருக்கும் டோபமைன் அளவை ஈடுகட்ட அல்லது அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு இந்த நோய் ஏற்படும்போது, அது முதியவர்களை விட மெதுவாகவே தீவிரமடைகிறது. முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் நோயாளிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.