Loading...
ஈரான் அமெரிக்கா அமைதி வரைவு திட்டம்: ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் உரேனியம் மாற்றம் பரிந்துரை
அமெரிக்கா மற்றும் ஈரான் பதற்றத்தை தணிக்க புதிய வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்கா அமைதி வரைவு திட்டம்: ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் உரேனியம் மாற்றம் பரிந்துரை

எழுதியவர் Vasuki
Oct 31, 2026
05:46 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான போர்ப்பதற்றத்தைத் தணிக்கும் வகையில் புதிய வரைவுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டத்தில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட உரேனியக் கையிருப்பை ஒரு மூன்றாம் நாட்டுக்கு மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை வெறும் 7 நாட்களுக்குள் மீண்டும் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை சர்வதேச ஊடகமான அல் அரபியா வெளியிட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, ஒப்பந்தத்தின் அமலாக்கம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் உத்தரவாத நாடாக சீனா செயல்பட வாய்ப்புள்ளது. அத்துடன், துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் பதிலாக, கத்தாரின் தோஹாவில் இருதரப்பு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு முறை

பொருளாதாரத் தடைகள் நீக்கம்

இந்த புதிய ஒப்பந்த வரைவின்படி, அணுசக்தித் திட்டங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பில் ஈரான் எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இணையாக, அமெரிக்கா தன் பங்கிற்கு ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள், துறைமுக முற்றுகைகள் மற்றும் நிதி சார்ந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.

இரு தரப்பும் தங்களது வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில், ஒவ்வொரு கட்டத்திற்கும் முன்பாக சுதந்திரமான சர்வதேச சரிபார்ப்பு நடைமுறை செயல்படுத்தப்படும்.

மேலும், ஒப்பந்தத்தை மீறுவதையோ அல்லது காலதாமதப்படுத்துவதையோ தடுக்கும் வகையில் மத்தியஸ்தர்கள் மற்றும் உத்தரவாத நாடுகள் அடங்கிய சர்ச்சை தீர்வு முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜே.டி. வேன்ஸ் கடிதம்

கத்தாரின் தூதரக முயற்சி

இவ்விரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரும் தீவிர முயற்சியாக, கத்தாரின் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் இந்தக் குழு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) எழுதிய முக்கியமான கடிதம் ஒன்றை ஈரானிய பாதுகாப்பு அதிகாரி மொஹ்சன் ரெசாயியிடம் ஒப்படைத்துள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் வான்வழி மற்றும் ராணுவத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கான புதிய ராஜதந்திரப் பாதையை இந்தக் கடிதம் திறந்துவிட்டுள்ளதாகக் கூறி ஈரானிய அதிகாரிகள் இதனை வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிதானும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜி20 மாநாட்டின் போது சந்தித்துப் பிராந்திய அமைதி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ட்ரம்பின் நிலைப்பாடு

போரை முடிக்க அவசரமில்லை

ஒருபுறம் தூதரக அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் போதிலும், ஈரானுடனான போரை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

"அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களால் தங்களது ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கூட சம்பளம் கொடுக்க முடியவில்லை.

அவர்கள் கடுமையான உள்நாட்டுச் சிக்கலில் உள்ளனர். நாங்கள் அங்கு 7 மாதங்களாக இருக்கிறோம். நேரம் எங்களுக்குச் சாதகமாகவே உள்ளது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், மற்றொருபுறம் ட்ரம்பின் ராணுவத் தாக்குதல் மிரட்டல்கள் தொடர்வது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்னும் நிச்சயமற்ற தன்மையையே நீடிக்கச் செய்துள்ளது.

ADVERTISEMENT