ஈரானை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: டிரம்பின் அடுத்த மூவ் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் நீடிக்கும் முட்டுக்கட்டையை உடைக்க, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த CENTCOM திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போதைக்கு நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்து, ஈரானைப் பொருளாதார ரீதியாக நெரிக்கக்கூடிய "கடற்படை முற்றுகைக்கே முன்னுரிமை அளித்து வருகிறார். ஆக்சியோஸ்-ற்கு அளித்த பேட்டியில், ஈரான் மீதான தனது பிடியை தளர்த்த டிரம்ப் மறுத்துவிட்டார். "குண்டுவீச்சை விட கடற்படை முற்றுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள், இது அவர்களுக்கு இன்னும் மோசமான நிலையை உருவாக்கும். ஈரான் எக்காரணம் கொண்டும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது," என அவர் கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்த பின்னரே அணுசக்தி பேச்சுவார்த்தை குறித்துப் பேச வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார்.
தாக்கம்
எகிறும் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய தாக்கம்
அமெரிக்காவின் இந்த முற்றுகைத் திட்டம் சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு மாத காலத்தில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எண்ணெய் நிறுவனங்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். பல மாதங்களுக்கு இந்த முற்றுகையைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை 25 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
ஈரானின் எச்சரிக்கையும் அணுசக்திப் பதற்றமும்
அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பதிலடியாக "முன்னெப்போதும் இல்லாத ராணுவ நடவடிக்கை" எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தங்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு எனத் தெரிவித்துள்ள ஈரான் பாதுகாப்புத் துறை, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தொடர்ந்து சீர்குலைக்கப்போவதாக அறிவித்துள்ளது. தற்போது ஈரானிடம் 60% வரை செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியம் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, இது அணு ஆயுதத் தயாரிப்பிற்கு மிக நெருக்கமான அளவாகும். உள்நாட்டில் கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவை ஈரான் சந்தித்து வந்தாலும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணியப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.