60 நாட்களில் ரூ.2 லட்சம் கோடி காலி: ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான போர் தொடங்கி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் முதன்முறையாக போருக்கான செலவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'Operation Epic Fury' எனப் பெயரிடப்பட்ட இந்தப் போருக்காக இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹2.08 லட்சம் கோடி) செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் பென்டகன் அதிகாரி ஜூல்ஸ் ஹர்ஸ்ட் சமர்ப்பித்த அறிக்கையில், இந்தப் பெரும் தொகை எதற்காகச் செலவிடப்பட்டது என்பது குறித்த முதற்கட்டத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
செலவுகள்
எகிறும் போர்க்காலச் செலவுகள்
அறிக்கையின்படி, செலவிடப்பட்ட தொகையில் பெரும்பகுதி ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் போர் உபகரணங்களுக்காகச் செலவாகியுள்ளது. போர்க்களத்தில் உள்ள இயந்திரங்கள் மற்றும் விமானங்களின் பராமரிப்பு மற்றும் பழுதடைந்த உபகரணங்களை மாற்றுவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 25 பில்லியன் டாலர் என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA) ஒட்டுமொத்த ஓராண்டு பட்ஜெட்டிற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கம்
பொருளாதாரத் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள்
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான கூடுதல் படைகள் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது உலக நாடுகளிலும் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.