கட்டாய உழைப்பு விவகாரம்: இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய வரியை அறிவித்தது டிரம்ப் நிர்வாகம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க உச்சநீதிமன்றம் முந்தைய பரவலான வரி நடைமுறையை முடக்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை இரவு இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது. கட்டாய உழைப்பு தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. ஆரம்பத்தில் இந்தியாவுக்கு 12.5% வரை வரி விதிக்க பரிசீலிக்கப்பட்ட போதிலும், தொழிலாளர் விதிமுறைகள் குறித்து வாஷிங்டனுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள அல்லது அது தொடர்பான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு 10% குறைந்தபட்ச வரி வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வும்
டிரம்ப் நிர்வாகம் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி அமல்படுத்திய 10% அகில உலக இறக்குமதி வரி நடைமுறையை அமெரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக ரத்து செய்தது.
அந்த தற்காலிக அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அதற்கு மாற்றாகவே 'பிரிவு 301' (Section 301) கீழ் இந்த புதிய வரிகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் அமல்படுத்தியுள்ளது.
நீதிமன்றத் தலையீடுகளால் தனது வர்த்தகக் கொள்கை இலக்குகள் பாதிக்கப்படுவதை டிரம்ப் அனுமதிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலக்குகள்
பிற நாடுகளுக்கான வரிகள் மற்றும் விலக்குகள்
போதுமான கட்டாய உழைப்பு எதிர்ப்பு சட்டங்கள் இல்லாத சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 10% முதல் 12.5% வரையிலான புதிய வரிகளை எதிர்கொள்கின்றன.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உள்நாட்டில் தயாரிக்க முடியாத அத்தியாவசிய பொருட்கள் மற்றும் USMCA ஒப்பந்தத்தின் கீழ் வரும் சில பொருட்களுக்கு இந்த புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது.
அமெரிக்க இறக்குமதியில் 99.4% பங்களிப்பைக் கொண்ட 60 நாடுகளை இப்பட்டியல் உள்ளடக்கியுள்ளது.
இப்புதிய வரியால் உடனடியாக அமெரிக்க நுகர்வோருக்கு பெரிய விலை உயர்வு இருக்காது என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், வரும் மாதங்களில் இதன் தாக்கம் தெரியவரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.