ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார். இந்தச் சந்திப்பு அற்புதமானதாக இருந்தது என்று விவரித்த டொனால்ட் டிரம்ப், சீனா மீதான வரிகளை 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பதாக அறிவித்தார். மேலும், முக்கியமான போதைப்பொருளான ஃபெண்டானில் மீதான வரியை 20% இலிருந்து 10% ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த மற்றொரு முக்கியப் பிரச்சினை, அரிய கனிமங்கள் (rare earths) ஆகும். இதுகுறித்தும் ஒரு வருட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
சீனா ஒப்புதல்
அரிய கனிமங்களை கொடுக்க சீனா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தகவல்
அரிய கனிமங்களின் ஏற்றுமதி மீதான சீனாவின் கட்டுப்பாடுகளை நீக்கி, அவற்றின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய சீனா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டார். இவை அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாகும். வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கூறுகையில், தாங்கள் பல முக்கியமான விஷயங்களில் முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். மேலும், சீனா ஏற்கனவே அறிவித்தபடி, பெரும் அளவிலான சோயாபீன்ஸ்களை வாங்கத் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வரிகளை ஆக்ரோஷமாகப் பயன்படுத்தினாலும், அரிய கனிமங்களை வைத்து சீனா ஆட்டம் காட்டிய நிலையில், இந்தச் சந்திப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மாறியுள்ளது.