அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டுவீச்சு விமானங்கள் அடங்கும்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது.
"ஈரான், அதன் கூட்டாளிகள் அல்லது அதன் பிரதிநிதிகள் இந்த தருணத்தை அமெரிக்க பணியாளர்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள நலன்களை குறிவைக்க பயன்படுத்தினால், அமெரிக்கா எங்கள் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்." என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு எனக் கூறினாலும், இவையனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் துருப்புகள்
தேர்தலுக்கு பிறகு கூடுதல் துருப்புகள் வரும்
கடந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட, தரையில் அமெரிக்க துருப்புக்களால் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய படைகள் வரும் மாதங்களில் வரத் தொடங்கும் என்று ரைடர் கூறினார்.
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முடிந்த பிறகு இந்த படை நகர்த்துதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 26 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக குறிப்பிடத்தக்க தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், முக்கியமான அணுசக்தி மற்றும் எண்ணெய் தளங்களில் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை.
இது ஈரான் 2024 அக்டோபர் தொடக்கத்தில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.