H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா
அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான விசாக்களாக கருதப்படும் H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது தான் முதல்முறையாக பெரிய கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த கட்டண உயர்வு, புலம்பெயர விரும்பும் குடும்பங்கள், முதலீட்டாளர் விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் முதலாளிகளை பாதிக்கும். இதனால், அரசாங்கத்திற்கு ஏற்படும் முக்கிய நன்மைகள் என்று பார்த்தால், குறைவான நிர்வாகச் சுமை, குறைவான பிழைகள், மேம்பட்ட செயல்முறைத் திறன் ஆகியவை ஆகும்.
H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வு விவரங்கள்
H-1B விசா விண்ணப்பக் கட்டணம் $460ல் இருந்து $780 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், அடுத்த ஆண்டு முதல் H-1B பதிவுக் கட்டணம் $10ல் இருந்து $215 ஆக உயர உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களால் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் H-1B விசாவை தான் நம்பி இருக்கிறார்கள். L-1 விசா கட்டணம் $460ல் இருந்து $1,385 ஆக உயர்ந்துள்ளது. EB-5 முதலீட்டாளர் விசா கட்டணம் $3,675ல் இருந்து $11,160 ஆக உயர்ந்துள்ளது. L-1 விசா என்பது ஒரு நிறுவனத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா ஆகும். அதிக பண மதிப்பு கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசா EB-5 என்று அழைக்கப்படுகிறது.