அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது. அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும், H-1B விசா நீண்ட காலமாக முக்கியமான விசாக உள்ளது. ஒருவர் சார்பாக பலமுறை பதிவு செய்ய தடை- தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் மிக முக்கியமான மாற்றமாக, ஒரு பணியாளரின் சார்பாக ஒரேமுறை மட்டுமே அவர் பணியாற்றும் நிறுவனத்தால் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் ஒருவருக்கு விசா கிடைக்கும் வாய்ப்பை, அவர் பணியாற்றும் நிறுவனங்கள் செயற்கையாக அதிகப்படுத்துவதை தடுக்க முடியும். இதற்காக, ஊழியருக்கு விசா ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்கள், அவரின் பாஸ்போர்ட்டையும் உடன் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
"முதலாளி-பணியாளர்" உறவு தேவை இல்லை
கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "முதலாளி- பணியாளர் உறவுமுறை" தற்போது நீக்கப்பட்டுள்ளது. முதலில் இருந்த முறைப்படி, ஒரு நிறுவனத்தை நிறுவியவர்கள் அந்த நிறுவனம் சார்பிலே விசா எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. தற்போது, தொழில்முனைவோர் எளிமையாக விசா எடுக்க இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர், அவர்கள் நிறுவனத்தின் 50% அதிகமான பங்குகளை வைத்திருந்தாலும் கூட H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ரிமோட் வேலைவாய்ப்புகளுக்கும் விசா வழங்கப்படும்
கொரோனா காலத்திற்குப் பின் அதிகரித்து வரும் ரிமோட் வேலை வாய்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தற்போது இப்புதிய மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், டெலிவொர்க், ரிமோட் வேலை அல்லது அமெரிக்காவில் உள்ள மற்ற ஆஃப்-சைட் வேலைவாய்ப்புகளின் பணி கடிதத்தின் மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சார்பில், முன்மொழியப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தானியங்கி "கேப்-கேப்" நீட்டிப்பு (Cap-Gap Extension)
முந்தைய முறையின் கீழ், F-1 விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) அக்டோபர் 1 வரை மட்டுமே நீட்டிக்கப்படும். தற்போது முன்மொழியப்பட்ட விதியின்படி, மாணவர்கள் அதை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அல்லது அவர்களின் H-1B விசாவைப் பெறும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீட்டிக்கலாம். அதிகப்படுத்தப்படும் ஆய்வுகள்- குறிப்பாக ஐடி உள்ளிட்ட துறைகளில் மோசடிகளை தவிர்க்க, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு, நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் நிறுவனங்களில் அறிவிக்கப்படாத திடீர் சோதனைகள் நடத்தி, ஊழியர்களிடம் கலந்துரையாடி, அவர்கள் H-1B விசா பெற தகுதியானவர்களா என சோதிப்பார்கள்.
கடுமையாக்கப்பட்ட "சிறப்புத் தொழில்"வரையறை
மற்றொரு குறிப்பிடப்பட்ட மாற்றமாக சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்பதின் வரையறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்புதிய விதினியின் படி,தேவையான பட்டப்படிப்பு மற்றும் பணியாற்றும் வேலைக்கு இடையே நேரடி தொடர்பு இருக்க வேண்டும். இந்த முன்மொழிவு திறமையான நபர்களுக்கு விசா மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம். பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் காலம்- முன்மொழிக்கப்பட்ட நடைமுறைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்த முன்மொழிவுகள் குறித்து டிசம்பர் 22ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதன்பின் பொதுமக்கள் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு முதல் இந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.