அமெரிக்காவின் பிரபல யுனைடெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டு கொலை
யுனைடெட் ஹெல்த்கேர் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாகும், இது வேறு எந்த நாட்டையும் விட சுகாதாரப் பாதுகாப்புக்காக அதிக பணம் செலுத்தும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. யுனைடெட் ஹெல்த் இன் இன்சூரன்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் தாம்சன் புதன்கிழமை காலை ஒரு தனியார் ஹோட்டலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அந்நிறுவனத்தின் முதலீட்டாளர் மாநாட்டிற்கு கலந்துகொள்ளும் முன்னர் அவர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முகமூடி அணிந்த சந்தேக நபரை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். இது குறிவைக்கப்பட்ட தாக்குதல் போல உள்ளதாக, காவல்துறையை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததாக கூறுகிறார் CEOவின் மனைவி
இந்த துப்பாக்கி சூடு குறித்து யுனைடெட் ஹெல்த் பதிலளிக்கவில்லை. மறுபுறம், கொல்லப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியின் மனைவி, அவர் உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு விவரங்கள் தெரியாது ஆனால் நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்களில் உள்ள "கவரேஜ் குறைபாடு" காரணமாக இது தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியதாக NBC நியூஸ் கூறியுள்ளது. தாம்சன் தலைமையிலான யுனைடெட் ஹெல்த்கேர் (UHC), US ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும், இது $281 பில்லியன் வருடாந்திர வருவாய் மற்றும் 140,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் பேக் ஆபீஸ், தொழில்நுட்பம் மற்றும் உத்தி வேலைகளுக்காக இந்தியாவில் வேலை செய்கிறார்கள்.