
பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி ஜெனரல் அசிம் முனீர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா ஆயுதப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்பட்டால், இந்த முன்னேற்றம் பாகிஸ்தானின் ராணுவத் தலைமைக்குள் ஒரு பெரிய கலகத்தைக் குறிக்கும்.
பிரச்சினைக்கு மூல காரணம்
பிரச்சினைக்கு மூல காரணமே அசிம் முனீர் தான்
இந்தியாவுடனான மோதலுக்கு மூல காரணமே அசிம் முனீர் தான் என்ற கருத்து பாகிஸ்தான் ராணுவத்தினரிடமே அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்ட நிலையில், ராணுவ தளபதி வெளியில் தலைகாட்டாமல், தனது குடும்பத்தை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பியதும் அந்நாட்டு ராணுவ வீரர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில்தான், தற்போது ராணுவத்திற்குள் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தற்போது வரை, கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அல்லது கட்டளையில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு ராணுவ ஊடகப் பிரிவோ (ISPR) எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
கடிதம்
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கடிதம்
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல்கள், மேஜர்கள் மற்றும் கேப்டன்கள் உட்பட மூத்த மற்றும் நடுத்தர அளவிலான இராணுவ அதிகாரிகள் குழுவால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கையொப்பமிடப்படாத கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தக் கடிதம் ஜெனரல் முனீரை ராஜினாமா செய்யக் கோருவதாகவும், அவர் ராணுவத்தை அரசியல்மயமாக்குவதாகவும், ஜனநாயக செயல்முறைகளை நசுக்குவதாகவும், ஊடக சுதந்திரத்தை முடக்குவதாகவும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மோசமாக்குவதாகவும் குற்றம் சாட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இல்லம் அருகே ட்ரோன்கள் தாக்கியதால், பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.