'ஒரே ராத்திரியில் ஈரானே காலியாகும்!': ட்ரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்
செய்தி முன்னோட்டம்
ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், "ஒரே இரவில் அந்த நாட்டை நிர்மூலமாக்க முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஈரானின் பிடிவாதமான போக்கிற்குப் மிகக்கடுமையான விலையை அந்நாடு கொடுக்க வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அழிவுத் திட்டம்
ட்ரம்ப்பின் 4 மணிநேர அழிவுத் திட்டம்
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் ஒவ்வொரு பாலமும், மின் உற்பத்தி நிலையமும் சில மணிநேரங்களில் சாம்பலாக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரானின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் வெறும் நான்கு மணிநேரத்தில் தரைமட்டமாக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. அவை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறும்" என்று அவர் கூறினார். இத்தகைய அழிவைச் சீரமைக்க ஈரானுக்குப் பல தசாப்தங்கள் ஆகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நிராகரிப்பு
ஈரானின் 10 அம்ச கோரிக்கையும் நிராகரிப்பும்
அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான், அதற்குப் பதிலாக 10 அம்சங்கள் கொண்ட புதிய சட்டகத்தை பாகிஸ்தான் வழியாக அனுப்பியுள்ளது. அதில் லெபனான் மற்றும் காசாவில் நிரந்தரப் போர் நிறுத்தம், ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை அங்கீகரித்தல், தடைகளை நீக்குதல் மற்றும் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், "ஈரான் தற்போது முற்றிலுமாக சிதைந்து வருகிறது, அதனால்தான் அவர்கள் போர்நிறுத்தத்தை விரும்புகிறார்கள். ஆனால் போர்நிறுத்தத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே உள்ளது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
விமர்சனம்
'விலங்குகள்' - ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனம்
ஈரானின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம் ஆகாதா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஈரான் சுமார் 60,000 பேரை கொன்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். போராட்டக்காரர்களை ஒடுக்கும் ஈரானிய அதிகாரிகளை 'விலங்குகள்' என்று சாடிய அவர், அந்த நாட்டை அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகவும், அங்கு செல்லும் கப்பல்களுக்கு சுங்கம் (Tolls) வசூலிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதால், இன்று இரவு ஒரு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் உலகெங்கும் நிலவுகிறது.